தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜே.என்.யு. பிரச்னையும் அதன் தாக்கமும் - ஜே.என்.யு.வை பயன்படுத்தி மக்களின் கவனத்தை பாஜக திருப்புகிறது

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான மக்களின் எதிர்ப்பு மனநிலை ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ஜே.என்.யு. விவகாரத்தை மத்தியில் ஆளும் அரசு கையிலெடுத்திருப்பதாக ஜே.என்.யு.வின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேகப் தன்னுடைய கட்டுரையில் விவரித்துள்ளார்.

The JNU crisis and its implications
The JNU crisis and its implications

By

Published : Jan 11, 2020, 8:21 PM IST

நாட்டின் தலைநகரான டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் நடந்துவரும் போராட்டங்கள், மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு எதிராக நாட்டில் வளர்ந்துவரும் இளைஞர்களின் அமைதியின்மையின் அறிகுறியாகும். அது மட்டுமல்லாமல் படித்தவர்கள், அரசியல் புரிதல் உள்ளவர்கள் ஆகியோர் மத்தியில் எழுந்துள்ள கோபம், பாதுகாப்பின்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பும் ஆகும்.

இதனை டெல்லியில் சிறப்பு அந்தஸ்துள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் அரசியல் உணர்வுள்ள இளைஞர்களின் போராட்டங்களாக மட்டுமே கருதுவது தவறானது. ஜே.என்.யு.வில் நடக்கும் நிகழ்வுகளை, அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, தேசிய குடியுரிமைப் பதிவேட்டு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பிற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் அமைதியின்மையுடனும் போராட்டத்துடனும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்துவரும் சி.ஏ.ஏ./என்.ஆர்.சி. எதிர்ப்பு போராட்டங்கள் முதலில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பரவி, பின்னர் பிற பகுதிகளுக்கும் பரவியது. இப்போராட்டங்கள் அனைத்தும் ஒரு புதிய அரசியலின் முன்னோடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அதன்மீது அரசியல் தாக்கங்களும் உள்ளன.

ஜே.என்.யு.வில் விடுதி பராமரிப்பு, உணவகத் தொழிலாளர்கள், சமையல்காரர்கள், சுகாதாரம், மின் கட்டணம், நீர் பயன்பாட்டுக் கட்டணங்கள் உள்ளிட்ட விடுதி கட்டண உயர்வை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் இறுதியிலிருந்தே மாணவர்கள் போராடிவருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் நியாயமாகத் தோன்றும் மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக செமஸ்டரின் கல்விப்பணிகள் முழுமையடையாமல் இருந்தன.

சரியான நேரத்தில் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன. எழுபது சதவீத மாணவர்கள் இந்த மாத ஆரம்பத்தில் தொடங்கவிருந்த புதிய செமஸ்டரில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்த சிலர் உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பிகள், சுத்தியல்களுடன் விடுதிகளுக்குள் நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.

மேலும், நேரில் கண்ட சாட்சிகள், புகைப்பட ஆதாரங்கள் ஆகியவை இருந்தபோதிலும், வன்முறை நடத்திய எழுபதுக்கும் மேற்பட்டவர்களில் ஒருவரைக் கூட மத்திய அரசின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறையினர் கைது செய்யவில்லை. இதனால் நாடே அறச்சீற்றம் கொண்டது.

கொள்கை உறுதிப்பாட்டாலும், அரசு விரோத போக்குகளுக்கு எதிரான கருத்துகளாலும் ஜே.என்.யு. எப்போதுமே வலதுசாரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய அரசுகள், ஜே.என்.யு.வின் அறிவுசார் தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு, அவர்களுடன் ஒத்துழைக்கவே விரும்பின.

அவர்களை அந்நியப்படுத்தாமல் அவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டன. ஆனால் மோடி தலைமையிலான அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் ஜே.என்.யு.வின் விமர்சனங்களைக் கையாளுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்குவது, அப்பல்கலைக்கழகத்தை தேசத்திற்கு எதிரானதாக சித்தரிப்பது என காங்கிரஸோடு முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடன் மோடி அரசு ஜே.என்.யு.வை அணுகுகிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, விண்ணைத் தொடுமளவிற்கு வளர்ந்து நிற்கும் வேலைவாய்ப்பின்மை, மாநில தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகள் ஆகிய அனைத்திலிருந்தும் மக்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பாமலிருக்க, ஜே.என்.யு. விவகாரத்தின் மீது மத்திய அரசு மக்களின் கவனத்தை திருப்புகிறது.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க விரும்பும் அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களின் பிரதான சக்தியாக விளங்கும் ஊடகங்களைப் பயன்படுத்தி ஜே.என்.யு.வை குற்றவாளியாகவும் நாட்டைத் துண்டாடும் சக்தியாகவும் பொதுமக்கள் மத்தியில் சித்தரிக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் நீதித்துறை ஆய்வுக்கு ஏற்ற எந்த ஆதாரமும் இல்லாதவை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்தியாவில் கடந்த 42 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார நிலைமை இப்போது இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் வாதாடுகிறார்கள். மேலும் உலக வங்கி 2020ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சியை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதையெல்லாம் சரிக்கட்டவே ஜே.என்.யு. விவகாரம் என்பது வலதுசாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ’வெகுஜன கவனச்சிதறல்’ ஆயுதமாகிறது.

சக்திவாய்ந்த கூட்டணியோடு தேசியவாத அரசியலை நிர்வகிப்பதற்கான திறன் பாஜகவிடம் இருந்தபோதிலும், நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்களின் பேராதரவு இருப்பதால் உறுதியற்ற நிலையில் தான் இருப்பதாக அக்கட்சி நினைக்கிறது. அதனால்தான் அமித் ஷாவும் மோடியும் என்.ஆர்.சி. விவகாரத்தில் வெவ்வெறு நிலைப்பாடுகளை எடுத்துவிட்டு மௌனம் காக்கிறார்கள்.

அரசியலில் நடுநிலை சக்திகளாக திகழும் பெரும்பான்மையான இளைஞர்களை வசப்படுத்தும் திறனை இழந்ததாலும், அவர்கள் இருவரும் வெவ்வெறு நிலைப்பாடுகளை கூறியிருக்கலாம். தற்போதைய பிரச்னைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஜே.என்.யு. பிரச்னையை பாஜக கையில் எடுத்தாலும், பல்முனைப் போராட்டங்களும் மக்களின் கோபமும் ஆளும் அரசின் மீது நீடித்தால் அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு பெரும் தலைவலியை நிச்சயம் ஏற்படுத்தும். பாஜகவின் மிகப்பெரிய அரசியல் ஆயுதம் மக்களைப் பிரித்தாளும் திறன் தான். ஆனால், அதன் கொள்கைகளுக்கு மக்கள் ஆட்படாமலிருந்தால், பாஜக அதன் சர்ச்சைக்குரிய கொள்கைகளைக் குறைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. விவாதத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் தேர்தல்களில் தன்னுடைய பிரித்தாளுமை திறனால் மக்களிடம் வாக்குகளைப் பெறவே பாஜக முயற்சி செய்யும். வருகின்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் எதிர் துருவத்திலுள்ள ஆம் ஆத்மி கட்சி எவ்வாறு மேற்கூரிய விவாதங்களைக் கையாளப்போகிறது என்பது குறித்த ஐயப்பாடு பாஜகவுக்கு நிறையவே இருக்கிறது. எது எவ்வாறாகினும் நாட்டில் அமைதியின்மை நீடிக்கும் பட்சத்தில், அது பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே மாறும்.

இதையும் படிங்க: பிரதமருக்கு எதிராக கறுப்பு பலூன் பறக்கவிட்ட கம்யூனிஸ்டுகள்!

ABOUT THE AUTHOR

...view details