மேற்கு வங்க மாநிலத்தின் ஊரடங்கு கள நிலவரத்தை ஆராய வருகை தரும் மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை அரசு உறுதி செய்வதுடன், பாதிப்பு குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பினரின் இறுதிக் குறிப்புகள் குறித்து, தனக்கு சமர்ப்பிக்க வேண்டுமென மேற்கு வங்க அரசை ஆளுநர் ஜகதீப் தங்கர் அறிவுறுத்தினார்.
ஆளுநரின் இந்த தலையீட்டால் ஆத்திரமடைந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநருக்கு பதிலளிக்கும் விதமாக ஏழு பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "நான் ஒரு பெருமைமிக்க இந்திய மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்பதையும் நீங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். முதலமைச்சர் - ஆளுநர் என்ற இந்த இரண்டு பதவியிலிருந்து செயலாற்றுபவர்களில் அரசியலமைப்பு ஒழுக்க நெறிகளையும் மீறியவர் யார்? " எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்தக் கடிதத்திற்குப் பதில் சொல்லும் விதமாக ஆளுநர், 5 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை நேற்றிரவு எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், ''ஆளுநர் 'நியமனம்' செய்யப்பட்டவர் என நீங்கள் தொடர்ந்து தவறாக புலம்புவதாக கருத முடிகிறது. மேலும், இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை புரியாமல், அறியாமையால் மட்டுமே கூறப்படுவதாகவே கருதுகிறேன். ஒருவேளை இது உங்கள் முடிவின் தூண்டுதலில் இருந்து வந்த கருத்தாக இருக்கலாம். ஆனால், உண்மை அல்ல.
மம்தாவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள மேற்கு வங்க ஆளுநர்! எனது இந்த பதிலை முதல்கட்ட பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள். முழுமையான ஆவணங்களுடன் நாளை இது தொடர்பாக உங்களுக்கு பதில் வழங்கப்படும். அதன்மூலம் நீங்கள் சொன்னது போல், ஆளுநரைப் பற்றி மாநில மக்கள் விழிப்புணர்வு அடையட்டும். ஆளுநர் மீது இதுநாள் வரை நீங்களும், உங்களது அமைச்சர்களும் தொடர்ச்சியாக முன்வைத்த கண்மூடித்தனமான கேள்விகளுக்கும் கோபத்திற்கும் பதில் அளிக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :மத்திய அரசின் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் ஆட்சியில் தலையீடு செய்கிறார் - மம்தா காட்டம்