தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூர் அரசியல் புதிருக்கு விடை கிடைக்குமா!

மணிப்பூர் பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததையடுத்து மாநில முதலமைச்சர் என். பைரன் சிங், ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 10ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலத்தின் அரசியல் புதிர் இன்னும் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The deepening conundrum of Manipur politics
The deepening conundrum of Manipur politics

By

Published : Aug 2, 2020, 5:46 PM IST

கடந்த செவ்வாய் அன்று போதை பொருள்களை விடுவிக்க வலியுறுத்தியது தொடர்பாக மணிப்பூர் பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இதையடுத்து, ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 29 எம்எல்ஏக்களை முதலமைச்சர் பைரன் சிங் ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்தார். இதில் பாஜக எம்எல்ஏக்களான என். இந்திரஜித், எல். ராமேஷோர் மெய்தி, டாக்டர் ஒய். ரதேஷ்யாம் மற்றும் எல். ராதாகிஷோர் ஆகியோர் பங்கேற்கவில்லை. தற்போதைய மணிப்பூர் அரசு தொடர்வதற்கு இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் ஆட்சியை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்த 4 எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதம் 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் என்பிபியில் இணைந்தது பைரன் சிங் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும், மேகாலயா முதலமைச்சர் மற்றும் என்பிபி தலைவருமான கான்ராட் சங்மா ஆகியோர் தலையிட்டு இப்பிரச்னையை முடித்துவைத்தனர்.

சமீபத்தில் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் லெய்செம்பா சனஜவோபாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்.கே. இமோ, ஒக்ரம் ஹென்ரி ஆகியோருக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதில் இமோ, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஆர்.கே. ஜெய்சந்திர சிங்கின் மகனும், தற்போதைய முதலமைச்சர் பைரன் சிங்கின் மருமகனும் ஆவார். ஹென்ரி, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஒக்ரம் இபாபி சிங்கின் அண்ணன் மகன் ஆவார்.

இமோவுக்கும் இபாபிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கட்சிக்குள் குளறுபடி ஏற்பட்டதாக அறியமுடிகிறது. இமோ நினைத்தால் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கலாம், ஆனால் அவர் பாஜக முதலமைச்சரின் மருமகனாக இருக்க விரும்புகிறார்.

இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, முதலமைச்சர் பைரன் சிங் தனது கட்சிக்குள்ளேயே ஒரு எதிரியை சமாளிக்க வேண்டியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் பிஷ்வஜித் சிங், பைரன் சிங்குக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு பைரன் சிங்கை பதிவியிறக்குவதற்கான வேலைகளை இவர் செய்தது குறிப்பிடத்தக்கது.

காவல் அலுவலர் பிரிந்தா, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் மணிப்பூர் அரசு மீது காங்கிரஸ் கட்சி இந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் லுகோசி சோவுக்கு தொடர்புண்டு. இவர் சண்டல் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஆவார். பாஜக ஆட்சிக்கு வந்த சில தினங்களில் அவர் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

லுகோசி இடத்திலிருந்து போதைப் பொருட்களையும், பழைய ரூபாய் நோட்டுகளையும் 2018ஆம் ஆண்டு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரிந்தா கைப்பற்றினார். இது தொடர்பாக ஜூலை மாத தொடக்கத்தில் பிரிந்தா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், லுகோசி மற்றும் அவரது கூட்டாளிகளை வெளியில் விடச் சொல்லி முதலமைச்சர் பைரன் சிங் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரிந்தா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டி மணிப்பூர் அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால், முதலமைச்சர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார். இந்த சூழலில், ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. அதில் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்கப்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details