டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அவ்வாறு பாஜகவுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், சிஏஏவுக்கு எதிராகப் போராடுபவர்களைச் சுட்டுவீழ்த்துங்கள் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், தேர்தல் ஆணையம் பரப்புரை செய்வதற்கு அனுராக் தாக்கூருக்குத் தடைவிதித்தது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஜாமியா பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களின் மீது 17 வயதேயான சிறுவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், ஒரு மாணவர் மீது குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள் ஷாகின்பாக் பகுதியில் மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூடு நடத்தி பதற்றத்தைக் கிளப்பினார்.
அடுத்ததாக நேற்று நள்ளிரவு ஜாமியாவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் மூன்றாவது முறையாக துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. நல்வாய்ப்பாக மேற்கூறிய இரு சம்பவத்திலும் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூரின் பேச்சுதான் காரணம் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.