அசாம் மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்துவந்த மிசோரம், கடந்த 1972ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு, அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
தெற்கு அசாமில் உள்ள காசர், ஹைலகாண்டி, கரிம்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்கள் மிசோரமின் கோலாசிப், மமிட், அய்சால் உள்ளிட்ட மாவட்டங்களுடன் எல்லையை பகிர்கின்றது. எல்லையிலுள்ள பெரும்பாலான பகுதிகளை இரு மாநிலங்களும் சொந்தம் கொண்டாடிவருகின்றன.
இது தொடர்பாக அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன. 1994ஆம் ஆண்டிலிருந்து, இரு மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியையே தழுவின.
இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில், கரோனா பரிசோதனை மையம் ஒன்றை மிசோரம் அமைத்துள்ளது. ஆனால், அதற்கு அசாம் அரசிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அசாம் மாநிலத்தின் லைலாப்பூர் பகுதிக்கு சென்ற மிசோரம் மாநிலத்தைத் சேர்ந்த இளைஞர்கள் வாகன ஓட்டுநர்களையும், கிராம மக்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளுக்கு தீவைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி பரவ, அண்டை மாவட்டங்களிலும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில், இதுவரை நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
பதற்றத்தை குறைக்க மத்திய உள் துறை அமைச்சகச் செயலர் அஜய் குமார் பல்லா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், இரு மாநில தலைமைச் செயலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய - சீன பிரச்சனை : அடுத்த வாரம் எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை