நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்றது முதல் பல்நாடு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்ததாகவும் தங்கள் கட்சியைச் சேர்ந்த பலர் ஒய்.எஸ்.ஆர். கட்சியினரின் தாக்குதலால் பலியாகியதாகவும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, ஆந்திர அரசுக்கு எதிராக "சலோ ஆத்மகூர்" என்ற போராட்டம் இன்று (செப் 11) நடத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்றிரவு பேசிய அம்மாநில காவல் துறை தலைவர் கௌதம் சவாங், "போராட்டம் நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. பல்நாடு, நரசரோபேட்டா, குரஜாலா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். பதற்றத்தைத் தடுக்க நேற்றிரவு முதலே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று சந்திரபாபு நாயுடுவும் - அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்திரபாபு நாயுடுவை ஊடகங்களிடம் பேசவும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நாரா லோகேஷ், “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நாரா லோகேஷ் இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதலால் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தது. இச்சம்பவங்களால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.