நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அதன்படி, தெலங்கானாவில் பரவும் கரோனா வைரஸ் தொடர்பாக முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில், வைரஸ் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்தும், சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இலவசமாக மருத்துவ சேவைகளில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து, ஊசி, உணவுக்கான செலவுகளை அரசால் வழங்கப்படும்.
தினந்தோறும் 40 ஆயிரம் பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க 10 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. கரோனா தொற்று லேசாக உள்ளவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ கிட் வழங்குவதற்காக 10 லட்சம் கருவிகள் தயாராக்கப்பட்டு வருகிறது" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "அரசு மருத்துவமனையில் தேவையான அனைவத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக எந்தவொரு பணத்தையும் செலவிட அரசாங்கம் தயாராக உள்ளது.
டெக்ஸாமெதாசோன் ஊசி, ஃபாவிபிராவிர் மாத்திரைகள், பிற மருந்துகள், பிபிஇ கருவிகள், சோதனைக் கருவிகள் ஆகிய அனைத்தும் தயார்நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், தெலங்கானா சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர், தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சியில் கலந்துரையாடி, மாவட்டங்களின் தேவையைக் கண்டறிந்து முடிவு எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.