தெலங்கானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பாளர்கள் புதிதாக 51 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இருவர் மரணித்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 1,326 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக ஹைதராபாத் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகள் அறியப்படுகின்றன.
இங்கு 37 பேருக்கு கரோனா தொற்று பாதிப்புகள் இருப்பதாக குடும்ப நல இயக்குனர் தெரிவித்துள்ளார். இதில் 14 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இதன்மூலம் தெலங்கானாவில் கரோனா பாதித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவில், “நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான புலம்பெயர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் நுழைகின்றனர். தெலங்கானாவுக்கு பல்வேறு இடங்கள் வழியாக வந்து சேரும் அறிகுறியற்ற புலம்பெயர்ந்தோர் வீட்டிலோ அல்லது அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலோ தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
இதற்கிடையில், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு புதிதாக வந்துள்ள புதிய நபர்கள் அல்லது குடியேறியவர்களை அடையாளம் கண்டால் உள்ளூர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்திற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரை சோதிக்க எல்லை மாவட்டங்களில் 87 சோதனைச் சாவடிகளில் 275 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 1,000 சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களைக் கைவிட்ட பிரதமர் - சுர்ஜிவாலா