தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா(42). இவரது கணவர் பிரபாகர் ரெட்டி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் சாய்நாத் ரெட்டி, மகள் அனுஷாவுடன் வசித்து வந்தார். சுனிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அதேபோல் சாய்நாத் ரெட்டி எம்.டெக் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற, அனுஷா பார்மசி படித்து வந்தார். இதற்கிடையில் பிரபாகர் ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு, வந்த காப்பீட்டுத் தொகையான 20 லட்சம் ரூபாயை அவர்களது குடும்பம் வங்கியில் சேமித்து வைத்திருந்தது.
இந்நிலையில் சாய்நாத் ரெட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார். அதில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததால், தனது தாய்க்கு தெரியாமல் வங்கியிலிருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து சாய்நாத் செலவு செய்துள்ளார். அதேபோல், வீட்டிலிருந்து 150 கிராம் தங்க நகைகளையும் வைத்து பந்தயம் கட்டி விளையாடியுள்ளார். இதுகுறித்து தாயாருக்குத் தெரியவர, சாய்நாத்தின் தாய் சுனிதாவும், அவரது தங்கை அனுஷாவும் கண்டித்துள்ளனர்.