தெலங்கானாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. இவர் அம்மாநில முதலமைச்சரின் மகனும், தொழில்நுட்ப, நகர் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவிற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஹைதராபாத் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஹிமாயத்சாகர், ஒஸ்மான் சாகர் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு இடையே சட்டத்திற்குப் புறம்பான முறையில் பண்ணை வீடு கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவினை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, பண்ணை வீடு நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைத்தது. மேலும், இந்த குழு இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், பண்ணை வீடு தொடர்பாக அமைச்சர் கே.டி.ராமாராவிற்கு வழங்கப்பட்ட பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து ட்வீட் செய்துள்ள கே.டி. ராமாராவ், "என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் தவறான அடிப்படையில் தொடுக்கப்பட்டுள்ளது. இது தன்னை தனிப்பட்ட முறையில் இழிவுப்படுத்துவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு. இதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.