உலகளவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்த வைரஸால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து வயது சார்ந்தவர்களுக்கும் பரவிவரும் இந்தக் கரோனா வைரஸ் அண்மையில் புலி ஒன்றுக்கும் முதன்முறையாக பரவியது. நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் உள்ள நடியா என்கிற பெண் புலிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்நிலையில், தான் வளர்க்கும் ஆடுகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்வரா ராவ் புதுவிதமான செயலில் ஈடுபட்டுள்ளார். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆடைகள் மூலம் பிரத்யேக முகக்கவசங்களை தயாரித்து தன்னிடம் உள்ள 20 ஆடுகளுக்கும் அணிவித்துள்ளார்.