தெலங்கானாவில் கரோனா வைரஸால் இதுவரை 1096 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். 585 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் மே 7ஆம் தேதியோடு ஊரடங்கு முடியவிருந்த நிலையில் அதை மேலும் 22 நாள்கள் (மே 29 வரை) நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த வாரம் மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்திருந்த நிலையில் தற்போது தெலங்கானா அரசு மே 29வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று இரவு கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவோம். அதனால் இரவில் 7 மணிக்கு மேல் மக்களின் நடமாட்டம் தடுக்கப்படும். மத்திய அரசு சிவப்பு மண்டலங்களில் சில தளர்வுகளை நீக்கி கடைகளை திறக்க அனுமதி வழங்கியிருந்தாலும் நாங்கள் அதை அனுமதிக்கப்போவதில்லை.
ஹைதராபாத் நகரிலும், மாநிலத்தில் ஆறு சிவப்பு மண்டலங்களிலும் கட்டடத் துறை சார்ந்த பணிகளுக்கு தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்போவதில்லை. தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களில் தளர்வுகளை நீக்குவது குறித்து மே 15ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு