முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தெலங்கானா அரசு முன்னெடுத்துள்ளது. தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்ம ராவின் நூறாவது பிறந்த நாளை, விமரிசையாக ஓராண்டு கொண்டாட முடிவு செய்துள்ள தெலங்கானா அரசு, சட்டப்பேரவையில் இது தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, மறைந்த பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் நரசிம்ம ராவுக்கு சிலை எழுப்பி, மைய வளாகத்தில் அவரது உருவப்படத்தை திறக்கவும் தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.