இனி தெலங்கானாவில் எந்தவித இடையூறும் இல்லாமல் கட்டட அனுமதி விண்ணப்பங்களைப் பெற முடியும். முன்னதாக, தெலங்கானா மாநில கட்டட அனுமதி மற்றும் சுய சான்றிதழ் முறை (TS-bPASS) மசோதாவை மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அமைச்சர் கே.டி.ராமராவ் இந்த மசோதாவை சட்டசபையில் அறிமுகப்படுத்தினார். செப்டம்பர் இறுதிக்குள், GHMC (ஹைதராபாத் மாநகராட்சி) உள்ளிட்ட அனைத்து நகராட்சிகளும் இந்த மசோதாவை செயல்படுத்தும். இதற்கு முன்பு, மாநிலத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் தொழில்கள் மற்றும் சேவைக்கான TS-iPASS முறையை தெலங்கானா அறிமுகப்படுத்தியது.
TS-bPASS மசோதாவின்படி, 75 சதுர கஜத்திற்குள்ளும் (675 சதுரடி), உயரம் 7 மீட்டர் வரையும் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறத் தேவையில்லை. 75 முதல் 600 சதுர கஜம் வரையிலான மனைகளில் கட்டுமானத்திற்கான அனுமதிகளை சுய சான்றிதழ் மூலம் பொதுமக்கள் பெறலாம். 600 சதுர கஜத்திற்கு மேல் மற்றும் உயரம் 10 மீட்டருக்கு மேல் கட்டடம் கட்டப்படும் அனைத்து மனைபிரிவுகளுக்கும் ஒற்றை சாளர ஒப்புதல் வழங்கப்படும்.
நகராட்சி அதிகாரிகள் ஆவணங்களை ஆராய்ந்து விண்ணப்பித்த 21 நாட்களுக்குள் தேவையான அனுமதிகளை வழங்குவார்கள். TS-iPASS-ஐ போலவே, பொதுமக்களும் அனுமதி மற்றும் NOC போன்றவற்றை பெற தேவையற்ற காத்திருப்பு மற்றும் அலுவலக நடைமுறைகளை தவிர்க்கலாம். நீர்ப்பாசனம், தீயணைப்பு, வருவாய் போன்ற அனைத்து தொடர்புடைய துறைகளுக்கும் தானாகவே விண்ணப்பம் சென்றுவிடுவதை புதிய மசோதா கட்டாயமாக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகள் தங்கள் கருத்துக்களை அல்லது ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழை 7 முதல் 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கையொப்பங்களுடன் 22ஆம் நாள் விண்ணப்பதாரருக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஒற்றை சாளர அமைப்பின் கீழ் அனைத்து திட்டங்களையும் உறுதி செய்வதற்காக மாநில அளவிலான TS-bPASS கண்காணிப்பு அமைப்பை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
TS-bPASS மசோதாவின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:
- நகர்ப்புறங்களில் கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர அனுமதி
- மொபைல் செயலி, TS-bPASS வலைத்தளம், மீ சேவா கியோஸ்க், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பொதுமக்கள் அனுமதி பெற விண்ணப்பிக்க முடியும்
- கட்டட வரைபடம் மற்றும் மண்டல வழிகாட்டுதல்களிலிருந்து தவறான தகவல் அல்லது விலகல் ஏற்பட்டால், ஒப்புதல் அளித்த 21 நாட்களுக்குள் அனுமதியை ரத்து செய்யலாம். சுய சான்றிதழ் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 21 நாட்களுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். இந்த 21 நாட்களுக்குள் ஆய்வுகள் முடிக்கப்படும். இக்குழுவுக்கு மாவட்ட அளவில் கலெக்டர் மற்றும் GHMCயில் மண்டல ஆணையர் தலைமை தாங்குவார்கள்
- சுய சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்டடங்களின் விவரங்களும் TS-bPASS இணையதளத்தில் கிடைக்கும்
- விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் அல்லது கட்டடம் இடிக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும்
- விண்ணப்பதாரர் சுய சான்றிதழ் படிவத்தில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டால், கட்டடத்தை முன் அறிவிப்பின்றி இடிக்கலாம் என்று உறுதியளிக்க வேண்டும்
அனுமதி அளிப்பதில் தாமதமானால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படும்