தெலங்கானா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.
நாட்டில் ஒரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை முன்வைத்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இது ஏராளமான மக்களை ஒதுக்கிவைக்கக் கூடும் என்றார். ஆகவே இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை கடுமையாக உள்ளன. இந்த நாடாளுமன்றச் சட்டம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, ஒரு பிரிவினரிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மக்கள் அச்சம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு காரணம், இது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோடி ஆகும். ஏனெனில் நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை உருவாக்கப்படவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், அவர்களின் குடியுரிமை, அவர்கள் பெற்றோரின் ஆவண சான்றுகளைக் காட்ட வேண்டும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
அரசியலமைப்பு மீறல்
இந்திய தேசம் பல்வேறு நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்களின் ஒருங்கிணைப்பு என்பதை அறிய வேண்டும். தேசத்தைக் கட்டமைத்த தந்தைகள், அரசியலமைப்பில் பன்முகத்தன்மை, பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றையே தழுவியிருந்தனர்.
ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அவர்களை அவமதிக்கிறது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள சமத்துவத்தின் கொள்கையை மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைக் கொண்ட மதச்சார்பின்மையின் கொள்கையையும் மீறுகிறது.
தெளிவான புரிதல்
குடியுரிமை திருத்தச் சட்டம், அனைத்து இந்தியர்களிடமிருந்தும், மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது. ஆக இதையெல்லாம் யோசித்துதான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆக எந்தவொரு புரிதலும் இல்லாமல் நாங்கள் இதை அப்பட்டமாகவும் கண்மூடித்தனமாகவும் எதிர்க்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைத் தெளிவான புரிதலுடன் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஏழைகளின் கதி
நான் ஒரு தகுதிமிக்க வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லை. இப்படி இருக்கையில் சாதாரண மக்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், நாடோடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற சாதிகளில் உள்ள ஏழைகளின் கதி என்னவாக இருக்கும்?
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதுமானதாக இல்லாவிட்டால், வேறு என்ன செய்வார்கள்?
எல்லைச் சுவர் கட்ட யோசனை
மெக்சிகோ அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையாமல் இருக்க டொனால்ட் ட்ரம்ப் சுவரொன்றை எழுப்பினார். இதேபோல் மியான்மர் அல்லது வேறு எல்லையில் சுவர் ஒன்றை எழுப்பினால் அதற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். யாரும் எதிர்க்க மாட்டோம்.
ஏனெனில் குடிமக்கள் சாதாரண வாழ்க்கை வாழ, ராணுவ வீரர்கள் எல்லைகளை காவல் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், சிலரை தேசவிரோதம் என்னும் போக்கையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. நாட்டில் எவ்வித பிளவுப்படுதலும் இருக்கக் கூடாது. இதுவே எனது அரசின் கருத்தாகும். இதன்மூலம் இந்திய அரசியலமைப்பின் ஆன்மா நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினத்தவர்களுக்கு (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், சீக்கியர்கள்) எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது என்பது நோக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க: என்பிஆர்.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்... இல்லையேல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்போம்: எஸ்டிபிஐ