தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஊரடங்கு உத்தரவால் தலசீமியா நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். தலசீமியா என்பது ஒரு மரபு சார்ந்த நோயாகும்.
இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் உற்பத்தியைக் குறைத்துவிடும். இது கிட்டத்தட்ட அனிமீயா எனப்படும் ரத்தசோகை நோய் போன்றதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை இரு யூனிட்கள் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் ரத்தம் கிடைக்காமல் அவதிப்படும் தலசீமியா நோயாளிகளுக்கு ராணுவ வீரர்கள் ரத்த தானம் கொடுத்து உதவியுள்ளனர்.
காவல் துறை உயர் அலுவலர் மகேந்தர் ரெட்டி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ரத்ததான முகாமில் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு 1200 யூனிட் ரத்தத்தை தானமாக கொடுத்தனர். இதன்மூலம் தலசீமியா நோயாளிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துள்ளது.
இது குறித்து தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை கூறுகையில், ”கரோனா தொற்று காரணமாக மக்கள் ரத்த தானம் கொடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், காவல் துறை எடுத்த இந்த முயற்சியால் எனது மகளுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா: ரத்த மாதிரி எடுக்கும் பணிகளைப் பார்வையிட்ட கரூர் ஆட்சியர்