பாட்னா (பிகார்):ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்.ஜே.டி.) தேஜஸ்வி யாதவ், மகாத்பந்தன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட 18 பேர் நேற்று (நவ. 05) காந்தி மைதானத்திற்குள் தடையை மீறி நுழைந்ததற்காக காந்தி மைதான காவல் துறையினர் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாட்னா மாவட்ட நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில் தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி. கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், காங்கிரஸ் மாநிலப் பிரிவுத் தலைவர் மதன் மோகன் ஜா உள்ளிட்ட 18 பேர் காந்தி மைதானத்திற்குள் நுழைந்தனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார் கூறுகையில், தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை மீறுவதற்கான தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து பாட்னா மாவட்ட ஆட்சியர் குமார் ரவி குறிப்பிடுகையில், "காந்தி மைதானத்திற்குள் தர்ணா போராட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த தனித்தனியாகச் செல்லதான் அனுமதிக்கப்படுகின்றது" எனத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்து ஆர்.ஜே.டி. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் கூறுகையில், "ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மகாத்பந்தன் கூட்டணி கட்சித் தலைவர்கள் 18 பேர் மீது பாட்னா மாவட்ட நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது" எனச் சாடினார்.
மேலும் அவர், "நாதுராம் கோட்சேவை வணங்கும் மக்களின் ஆதரவுடன் பிகார் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு நிதிஷ்குமார் தனது கண்ணியத்தை இழந்துவிட்டார். அவர்கள் உழவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல; ஜனநாயக மதிப்பை கொலைசெய்பவர்களும்கூட!" எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய சித்ரஞ்சன், "நிதிஷ்குமார் மனிதநேயத்தை இழந்துவிட்டார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த இடைவெளியை மீறிய பல விஷயங்களை எங்களால் எடுத்துக்காட்டாக கூற முடியும். நிதிஷ்குமார் அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பொதுமக்கள், உழவர்களுக்கு எப்போதும் ஆதரவாகவே செயல்படப்போகிறோம்" என்றார்.