நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிகார் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ள நிலையில் அக்கட்சியின் முகமாக தேஜஷ்வி பிரசாத் யாதவ் மாறியிருந்தார்.
துடிப்பும், இளமையும் நிறைந்த தேஜஷ்வி பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணி பிகார் தேர்தலில் பெரும் செல்வாக்கை ஈட்டி, பிரதான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்ந்திருக்கிறது.
இதனையடுத்து, மகா கூட்டணிக்கு வாக்களித்த பிகார் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க 'தன்யாவத் யாத்திரை'யை ஜன.15ஆம் தேதி தொடங்கவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். இந்த யாத்திரை பிகார் அரசியலில் பெரும் தாக்கம் செலுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், தன்யாவத் யாத்திரை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) தலைவர் மாதவ் ஆனந்த், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ், பிகார் முதலமைச்சராக பதவியேற்க உயர் சாதியினரின் ஆதரவு தேவை. அது இல்லாமல் ஒருபோதும் அவரால் முதலமைச்சராக முடியாது.
தன்யாவத் யாத்திரை என்ற முடிவு தேஜஷ்வியின் தனிப்பட்ட சிந்தனையாகவோ அல்லது அவரது கட்சி மூத்தத் தலைவர்களின் செயல் உத்தியாகவோ இருக்கலாம். ஆனால், அந்த திட்டத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. மக்கள் தற்போது அவர்கள் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. இனி கேட்கவும் மாட்டார்கள். ஆர்.ஜே.டி.யின் பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது உடைக்கப்பட்டுள்ளது.
உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் தேஜஷ்வியுடன் இல்லை. அவர்களை தனது பக்கம் கொண்டு வர ஆர்.ஜே.டி ஒரு புதிய திறஞ்சார்ந்த செயல்திட்டத்தை பின்பற்ற வேண்டும்” என்றார்.
ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி தலைவர் மாதவ் ஆனந்த் கடந்த 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்.எல்.எஸ்.பி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்), பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) கூட்டணிக்கு யாதவ், இஸ்லாமிய சமூக வாக்குகளை பெற்றிருந்தது.
தற்போது பிகாரை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசு நீண்ட காலம் நீடிக்காது என்பதால் 2021ஆம் ஆண்டில் இடைத்தேர்தலுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதால், எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு தனது கட்சி தொண்டர்களிடம் தேஜஷ்வி ஏற்கனவே கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம் - கட்டுமான ஒப்பந்ததாரர் கைது