243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
தலைநகர் பாட்னா 17 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 94 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது.
பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி.யும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிடுகின்றன.
என்.டி.ஏ. கூட்டணி சார்பில் பாஜக 46, ஜேடியு 43 இடங்களில் போட்டியிடுகின்றன. மகா கூட்டணியின் சார்பாக ஆர்ஜேடி 56, காங்கிரஸ் 24, சி.பி.எம்.எல். 6, சி.பி.எம்., சி.பி.ஐ. தலா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எல்.ஜே.பி. 52 இடங்களில் போட்டியிடுகின்றன.
இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் 1316 ஆண் வேட்பாளர்களும், 146 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை என மொத்தமாக 1463 போட்டியிட்டுகின்றனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான ஆர்ஜேடியின் தேஜஷ்வி பிரசாத் யாதவ், தேஜஷ்வியின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், ஆர்.ஜே.டி.யின் மூத்தத் தலைவர்களான சக்தி சிங் யாதவ், பிகார் ஷெரீப், ஜே.டி.யு. தலைமையிலான பிகார் அமைச்சர்களான ஷ்ரவன்குமார், நந்த் கிஷோர் யாதவ், ராம் சேவக் சிங், ராணா ரந்தீர் சிங், காவல் துறை முன்னாள்ஆய்வாளரான ரவி ஜோதி என பல பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிகபட்சமாக மகராஜ்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் 27 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக தாராலு தொகுதியில் 4 பேர் மட்டுமே களமிறங்குகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்களில் 34 விழுக்காட்டினார் குற்றப்பின்னணி உடையவர்களாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்குப் பதிவுக்காக 41,362 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிகாரின் ஆளும் கட்சியான ஜே.டி.யு.வின் தலைவர் நிதிஷ் குமார், பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோரும் சூறாவளி பரப்புரை மேற்கொண்டனர்.