எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றிவந்த தேஜ் பகதூர் யாதவ், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு முறையான உணவு வழங்குவதில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பாஜக அரசாங்கத்தை பலரும் கேள்வி எழுப்பினர். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் மிச்சம்.
பணி நீக்கம் செய்யப்பட்ட தேஜ் பகதூர், மோடி அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டருக்கு எதிராக போட்டியிடவுள்ளார்.