தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசியைக் காரணம் காட்டி வங்கதேசத்துடன் நட்புறவை சீர் செய்யும் இந்தியா! - இந்திய வங்கதேச உறவு

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ்வர்தனின் வங்கதேச பயணத்தின் பின்னணி அதன் தாக்கம் தொடர்பாக மூத்த செய்தியாளர் அரோனிம் பூயான் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

Teesta
Teesta

By

Published : Aug 20, 2020, 6:40 AM IST

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா, வங்கதேசத்திற்கு மேற்கொண்ட திடீர் பயணத்தை முடித்து நாடு திரும்பிய நிலையில், கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அந்நாட்டிற்கு பிராதன முக்கியத்துவம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். வங்கதேசத்தின் தீஸ்தா நதியை நிர்வகிக்க, சீன அரசு ஒரு பில்லியன் டாலர் நிதி அளித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை செயலரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தீஸ்தா நதி நீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டே, இந்தப் பயணம் இருந்திருக்கும் எனவும்; இது தொடர்பாக செயலர் நிச்சயம் பேசியிருப்பார் எனவும்; இந்த விவகாரத்தை பின்தொடரும் முக்கிய வெளியுறவுத்துறை நிபுணர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா பரவலுக்குப்பின் வெளியுறவுத்துறைச் செயலர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது. இந்நிலையில் வங்கதேச வெளியுறவுத்துறை அலுவலர் மசூத் பின் மோமெனுடன் சந்திப்பை மேற்கொண்ட ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா, கோவிட்-19 தடுப்பூசியை வங்கதேசத்திற்கு வழங்க முன்வருவதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி உருவாகும் பட்சத்தில் நட்பு நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் இந்தியா நிச்சயம் வழங்கும். அதில் வங்கதேசத்திற்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு எனவும் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதி கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், அதை அதிகளவில் உற்பத்தி செய்ய இந்தியா தயாராகி வருகிறது. உலகிற்குத் தேவையான 60 விழுக்காடு தடுப்பூசியை இந்தியா தயார் செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தடுப்பூசி பரிசோதனைக்கு உதவ வங்கதேச அரசு தயாராகவுள்ளதாக தெரிவித்த மோமென், இந்திய தயாரிப்பு தடுப்பூசி மட்டுமல்லாது, ஆரம்பகட்ட சோதனை தடுப்பு மருந்துகளையும் வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்வோம் என இந்தியா உறுதியளித்ததாக வங்கதேச வெளியுறவுத்துறை அலுவலர் மசூத் பின் மோமென் கூறினார். கரோனா தடுப்பு நடவடிக்கையின் உதவிப் பணியாக வங்கதேச நாட்டிற்கு பி.பி.இ. கருவிகள், மாத்திரை உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட எந்த நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்தாலும்; அதைத் தங்கள் பயன்படுத்த தயாராக உள்ளோம் என வங்கதேச வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் தான் இந்திய அரசின் முக்கியப் பிரதிநிதியாக இரு நாட்டு உறவை பலப்படுத்த வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவை சந்தித்தார், சிரிங்கலா. இந்த கரோனா சூழலிலும் வங்கதேசத்துடனான உறவின் முக்கியத்துவத்தை அறிந்தே பிரதமர் மோடி தன்னை அனுப்பி வைத்தாக அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலும் பலமான உறவு தொடர வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக சிரிங்கலா கூறினார்.

இரு நாடுகளும் பல்வேறு கூட்டுத் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தாண்டு வங்கதேச பிதாமகனான முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு கொண்டாட்டம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற இந்தியா இருநாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால உறவை அடுத்தாண்டு கொண்டாடுகிறோம் என்றது.

இதற்கிடையேதான், கரோனா தடுப்பூசியைக் காரணம் காட்டி, வங்கதேசத்தில் மையம் கொண்ட சீனாவின் திடீர் ஆதிக்கத்தை சீர் செய்ய இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் வங்கதேசம் சென்றுள்ளார். சீனாவின் 'சீனோவாக் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேச அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீஸ்தா நதியை நிர்வகிக்க வங்கதேசத்திற்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியது, இந்தியாவுக்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. தெற்காசிய நாடுகளின் நதி நீர் விவகாரத்தில் சீனா தலையிடுவது இதுவே முதல்முறை.

இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட நாடாக இருந்தாலும் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் தீஸ்தா நதி தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு காரணமாக, அது கைவிடப்பட்டது.

கிழக்கு இமயமலைப் பகுதியில் உருவாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே வங்கதேசத்தை சென்றடைகிறது. இந்த நதி வங்கதேசத்தில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தினாலும், இரண்டு மாத பனிக்காலத்தின்போது மட்டும் அங்கு வறண்டு விடும்.

1996ஆம் ஆண்டு போடப்பட்ட கங்கை நதி ஒப்பந்தத்தின்படி, தீஸ்தா நதி நீரை சம அளவில் பங்கிட்டுத் தர வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மேற்கு வங்க அரசின் எதிர்ப்புக் காரணமாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியது, இந்திய வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான் தீஸ்தா நதியை சீர் செய்து நிர்வகிக்க வங்கதேசத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதியை சீனா வழங்கியுள்ளது. இதன்மூலம் மிகப்பெரும் நதி நீர் தேக்கத்தை உருவாக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

தேசப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடவடிக்கைகள் அரங்கேறும்பட்சத்தில், அதற்கு இந்தியா பதில் நடவடிக்கை அளிக்க தயங்காது என அந்த வெளியுறவுத்துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் பேக்குவா என்ற இடத்தில் பி.என்.எஸ் என்ற நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை உருவாக்கி, அந்நாட்டிற்கு இரண்டு நீர் மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

சீனாவின் பி.ஆர்.ஐ.(B.R.I.) திட்டத்திற்கு வங்கதேச பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளது, இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செயல்படும், இந்தத் திட்டத்தில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டது. இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் அதேவேளை சீனாவின் கடல்சார் திட்டத்திற்கு வங்கதேசம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

சீனாவின் ஆதிக்கம் வங்கதேசத்தில் அதிகரித்துள்ள நிலையில், இன்னொரு அண்டை நாடும் சீனாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்த தொடங்கியுள்ளது என முக்கிய வெளியுறவுத்துறை நிபுணர் ஈடிவி பாரத்திடம் வேதனைத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details