மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அருகே கர்பட்வாடி கிராமத்தில் முர்பத் வனப்பகுதி அருகே நரேஷ் குல்ராம் பாலா (14), ஹர்ஷத் வித்தால் பாலா (7) என்ற சிறுவர்கள் தனது பாட்டியுடன் வசித்துவருகின்றனர்.
சிறுவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வனப்பகுதியில் பிளாக்பெர்ரிஷ் பழம் பறிக்கச் சென்றனர். அப்போது அவர்களின் பாட்டி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்.
ஹர்ஷத் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்குவந்த சிறுத்தை அந்தச் சிறுவனை தாக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட நரேஷ் துரிதமாக கட்டை, கல் போன்றவற்றால் சிறுத்தையைத் தாக்கியுள்ளான்.
சிறுத்தையிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய பையன் இதனிடையில் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பாட்டி, சிறுத்தையைக் கண்டதும், கையில் அரிவாள் எடுத்து ஓடினார். அதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
பின்னர் காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை அலுவலர்கள் காட்டுப்பகுதியில் தேடி பார்க்கையில், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை அறிந்தனர்.
இதையடுத்து, சிறுத்தையின் உடலை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் இறந்தது வயதான பெண் சிறுத்தை என்றும், அதன் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், டக்வாடே காவல் நிலைய அலுவலர்கள் சிறுவர்களின் துணிகர செயலைப் பாராட்டி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
14 வயது சிறுவன் சிறுத்தையை துரத்தியது அந்த ஊர்மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.