தீபாவளிப் பண்டிகை முடிந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும் கடந்த பல நாட்களாக இந்திய வீடுகளில் உள்ள சமையல் அறைகளில் 'வெங்காய விலை' வெடியாக வெடித்து இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது. எப்படி வெங்காய விலை திடீரென்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, மொத்த விலை சந்தைகளிலேயே கிலோ ரூ.100/- க்கு விற்கப்படுகிறது என்பதை நாடே வியந்து பார்க்கிறது.
வெங்காய களஞ்சியம்:
மகாராஷ்டிர மாநில வெங்காய உற்பத்தி களஞ்சியங்களான சோலாப்பூர், மற்றும் சங்கனேர் விற்பனைக் கூடங்களில் வெங்காயம் கிலோ ரூ. 110/- க்கு விற்பனை செய்யப்படுகின்றது . கோவை போன்ற தென்னிந்திய மாநகரங்களில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 100/- க்கும் , சிறிய வெங்காயம் கிலோ ரூ. 130/-க்கும் விற்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை வாரியம் தனது செய்திக் குறிப்பில், நாடெங்கிலும் உள்ள பெரும்பான்மையான பெரு நகரங்களில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை ரூ. 80/-க்கு உயர்ந்துள்ளது என்று அறிவித்திருந்த போதிலும், முன் எப்போதும் இல்லாத அளவு விலை விண்ணைத்தொடும் அளவு உயர்ந்துள்ளது என்பது நாடறிந்த உண்மை.
ஹைதராபாத், நாக்பூர், போபால் போன்ற மாநகரங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் பெரும்பாலான நுகர்வோர்களின் பணப்பைகளில் ஓட்டை விழுந்ததுதான் மிச்சம். மகாராஷ்டிரம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் , உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பருவம் கடந்து பெய்த கனமழையானது பயிர் மகசூலைப் பாதித்தது. சர்வதேச வெங்காய உற்பத்தியாளர்களிடையே சீனாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
கனமழையும் வெங்காயமும்:
எதிர்பாராத கனமழையால் பயிர்ச்சேதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் வெளி நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும், அதே வேளையில் உள் நாட்டு வெங்காய மகசூலை அதிகப்படுத்தி உள் நாட்டு சந்தைகளில் போதுமான வெங்காய வரத்து உறுதிசெய்யப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் பஸ்வான் அறிவித்திருக்கிறார். வெங்காய இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் பொறுப்பை தேசிய வர்த்தக நிறுவனமான MMTC வசம் இருக்கும். இறக்குமதி செய்யப்படும் சரக்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கும் பொறுப்பு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் வெங்காயத்தின் விலையை மேலும் குறைக்க வேண்டுமென மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. அவ்வாறு மத்திய அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்றால், அதன் பலன் நுகர்வோரைப் போய் சேருமா என்பது கேள்விக்குறியே.
வெங்காயத்தின் கடந்தகால வரலாறு:
கடந்த பல ஆண்டுகளாகவே திடீர் வெங்காய விலை ஏற்றத்தினால் நுகர்வோர் கண்ணீர் சிந்தும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் கிலோ ரூ. 60/-க்கு மேல் விற்ற போது, மத்திய அரசு இது விடயத்தில் தன்னால் எந்தத் தீர்வு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற தன் இயலாமையை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டது. இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான வெங்காய விநியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, செப்டம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், உறுதி அளித்தபடி மாநிலங்களின் முக்கால் வாசி வெங்காயத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் வெங்காயத்தின் விலை ஏற்ற நிலைமையைச் சரி செய்ய, மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுத்தது என நம்புவதற்கு எள்ளளவும் இடம் இல்லை.
வெங்காய இறக்குமதி:
வெங்காய விலையேற்றம் அபாயகட்டத்தை எட்டியதைக் கண்ட மத்திய அரசு வெங்காயத்திற்கான ஏற்றுமதி மானியத் தொகை திட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால், சில்லறை வியாபாரிகள் நூறு குவிண்டால் வெங்காயமும் மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வெங்காயமும் இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவசரத் தேவைக்காக எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மானிய விலையில், வெங்காயம் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் இத்தகைய மானிய விலை விற்பனை நுகர்வோருக்கு பெருமளவில் நன்மை பயப்பதற்குப் பதிலாக விலையேற்றத்திற்கே வழி வகுக்கும்.