ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கால வெங்கட் ராவ், மாநிலத் தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். கிராம பஞ்சாயத்துக் கட்டடங்கள், சாலைகள், வகுப்பறைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் கட்சிக்கொடி வண்ணம் பூசப்படுகிறது.
சில பகுதிகளில் அக்கட்சியின் கட்சிக் கொடியான மின்விசிறியும் வரையப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2019ஆம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் சில வரைமுறைகளை வகுத்தது. இந்தச் சட்ட வரைமுறைகளுக்கு முற்றிலும் எதிராகத் தற்போது நடந்துவருகிறது.
ஏனெனில் எந்தவொரு வேட்பாளரும் தங்கள் கட்சி சின்னங்களை, தனியார் மற்றும் அரசு சுவர்களில் பயன்படுத்தக் கூடாது. ஆகவே ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.