புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனைவிட 1500க்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, வெங்கடேசன் இன்று தட்டாஞ்சாவடி தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெங்கடேசனுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், திமுக மாநில அமைப்பாளர்கள் எம்எல்ஏ சிவா, சிவக்குமார், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோரும் வெங்கடேசநுக்கு வாழத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுக்கு அழைப்பு அனுப்பியும், முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல் ஏக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.