கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 918 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 பேருக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்குத் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது நாம் சந்தித்துவரும் கோவிட் 19 வைரஸ் நெருக்கடி என்பது மனித இனமான நாம் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சவால்களில் ஒன்று.
கடந்த காலங்களில் தேசம் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கும்போதெல்லாம் டாடா நிறுவனம் உறுதுணையாக இருந்துள்ளது. இப்போதைய தேவை என்பது வேறெப்போதையும்விட அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவியாக ரூ. 500 கோடியை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.