தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் இருந்த ஒரே தமிழ் வழி பள்ளி மூடல்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்! - குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளி மூடப்பட்டதால், அப்பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Tamil school in Gujarat closed
Tamil school in Gujarat closed

By

Published : Sep 7, 2020, 10:14 PM IST

Updated : Sep 24, 2020, 3:44 PM IST

நாடு முழுவதும் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை. வயிற்றுப் பிழைப்புக்காக மொழி, இனம், கலாச்சாரம், உணவு என அனைத்திலும் அந்நியப்பட்ட ஒரு இடத்திற்குச் செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பாடு திண்டாட்டம்தான்.

ஒவ்வொரு பகுதியில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் ஒவ்வொரு வகையான சிக்கலை எதிர்கொள்கின்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டனர்.

அதேபோல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழர்கள் புதியதொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 100 தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

குஜராத்தில் இருக்கும் தமிழ் வழி பள்ளி

இவர்களின் பிள்ளைகள் தாய் மொழியில் கல்வி கற்க ஏதுவாக, ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்யாலயம் என்ற பள்ளி இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. சுமார் 81 ஆண்டுகளாக இயங்கும் இப்பள்ளி, குஜராத் மாநிலத்தில் தமிழ் வழியில் பாடத்தை கற்பிக்கும் ஒரே மேல்நிலைப் பள்ளியாகும்.

ஒரு காலத்தில் இந்தப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் வரை படித்துவந்தனர். ஆங்கிலத்தின் மேல் உள்ள மோகத்தால், பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்ப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தது. இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது இப்பள்ளியில் வெறும் 31 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

குஜராத்தில் இருந்த ஒரே தமிழ் வழி பள்ளி மூடல்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 36 மாணவர்கள் வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இங்குள்ள ஆசிரியர்கள் எவ்வளவு முயன்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. போதிய மாணவர்கள் இல்லாததைக் காரணம்காட்டி மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்தசெய்துள்ளார்.

இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் மஞ்சுளா கூறுகையில், " எனது மகன் இந்தப் பள்ளியின்தான் படித்துவருகிறார். எங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் புரியாது, குஜராத்தி மற்றும் இந்தியும் சரியாக வராது. தமிழ் வழியில் மட்டுமே எங்கள் பிள்ளைகளால் கல்வி கற்க முடியும். இதுதவிர நாங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் எங்களுக்குத் தேவை. எனவே தமிழ் மொழியில் கல்வி கற்றால் மட்டுமே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்தப் பள்ளி நிறுத்தப்பட்டுள்ளது. எங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க இப்பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.

மாவட்ட கல்வி அலுவலரின் இந்த உத்தரவு 31 குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளனர் இங்குள்ள குஜராத் வாழ் தமிழர்கள்.

இதுகுறித்து பள்ளியின் அறங்காவலர் ரவி கூறுகையில், "நானும் இப்பள்ளியின்தான் படித்தேன். இப்போது இந்தப் பள்ளியில் அறங்காவலராக உள்ளேன். நாங்கள் எவ்வளவு வலியுறுத்தியும் போதிய மாணவர்கள் இல்லை என்பதை காரணமாகக் கூறி இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனர். ஆனால், இதை எதிர்த்து நாங்கள் போராட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

குஜராத்தில் தமிழ் வழியில் பாடத்தை கற்பிக்கும் இந்தப் பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க வேண்டும் என்றும் பிள்ளைகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மூடப்பட்ட தமிழ் பள்ளி... கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி...

Last Updated : Sep 24, 2020, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details