இந்தியாவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் நோக்கில், இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கிருமி லேயர் முறை பின்பற்றப்பட்டுவருகிறது. அதாவது, சமூகத்தில் வசதி மிகுந்த ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள் கிருமி லேயர் பிரிவின் கீழ் வருவர். இந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பலன் கிடைக்காது.
இந்த முறையில் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மதிமுக பொதுச் செயலாளரும் மூத்த மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கிருமி லேயர் முறையில் ஊதியத்தை கணக்கிடுவது இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மாநிலங்களுக்கு வழங்கப்படும் அகில இந்திய தொகுப்புக்கு இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
கிருமி லேயர் முறையில் ஊதியத்தை கணக்கிடுவது இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து பின்பற்றபடாத முறை" என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "இட ஒதுக்கீடு முறையையே அழிக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் அதன் நடவடிக்கைகள் மூலம் எழுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறையை கடந்த நான்கு ஆண்டுகள் பின்பற்றவில்லை.
தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 19 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவருகிறது" என தெரிவித்துள்ளார். ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது என, திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்குரைஞரான வில்சன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட கடற்படை ஹெலிகாப்டர்!