இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்திய அரசு வழங்கியது. பின்னர், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிசெய்தது.
ஆனால், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 2018-19 கல்வியாண்டில், மொத்தமுள்ள 7,982 இடங்களில் 2,152 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 220 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
அதேபோல், இளங்கலை மருத்துவப் படிப்பில் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 66 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இளங்களை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை தேசிய அளவில் 4,061 இடங்கள் உள்ளன.