தப்லீகி ஜமாத் விவகாரத்தில் சில ஊடகங்களின் இரட்டை செயல்பாடு குறித்து சொசைட்டி ஆஃப் பாலிசி ஸ்டடீஸ் அமைப்பின் இயக்குனர் சி. உதய் பாஸ்கர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...
கரோனா வைரஸ் பெருந்தொற்று ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவில் தீவிரமாக பரவத் தொடங்கிய சூழலில் இந்திய ஊடகங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் தொனியில் இருந்தது.
1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு, கடந்த மார்ச் மாத மத்தியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிதளைக் கொண்டு டெல்லி நிஜாமுதீன் மசூதியில் மாநாடு ஒன்றை நடத்தியது. கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த பொறுப்பற்ற செயல்பாட்டின் மூலம் இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை தீவிரமைடையும் அச்சம் இதன் மூலம் எழத்தொடங்கியது.
இதையடுத்து நாடுமுழுவதும் மார்ச் இறுதியிலிருந்து ஏப்ரல் தொடக்கம்வரை தப்லீகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றது. இந்த விவகாரத்திற்கு மதச்சாயம் பூசி சில ஊடகங்கள் தவறான கட்டமைப்பை மேற்கொள்ளத் தொடங்கின.
ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தில் இதுபோன்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் ஒரு சில ஊடக குழுக்கள் செயல்பட்டன.
இதன் தொடர்ச்சியாகவே சில காட்சி ஊடகங்கள் வைரஸ் பரவலுக்கு மத கண்ணோட்டத்தை அளித்து, அதற்கு தப்லீகி வைரஸ், கரோனா ஜிஹாத் என்ற பெயர்களை எல்லாம் வைத்தன. சமூக வலைத்தளம் மூலம் நடத்தப்பட்ட இந்த வெறுப்பு பிரச்சாரத்தில், இந்த வைரஸ் வுஹானில் அல்ல நிசாமுதீனில் தான் தொடங்கியது என்ற அளவிற்கு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபோன்ற பொய் செய்திகளும் பரப்புரைகளும் எந்தவித அடிப்படை அர்தமும் இல்லை என்று தெரிந்தும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு இஸ்லாமிய சமூகத்தின் மீது தவறான பார்வை முன்வைத்தது. மேற்கண்ட நிஜாமுதீன் சம்பவத்தைக் கொண்டு ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மீதும் தவறான எண்ணத்தை விதைக்கும் நோக்கில் ஒரு குறிப்பட ஊடகக் குழு செயல்பட்டதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.