தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 5:48 PM IST

ETV Bharat / bharat

தப்லீக் ஜமாத் வழக்கு: 536 வெளிநாட்டினர் மீது 12 பிரிவுகளின் கீழ் புதிய வழக்குகள்!

தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 536 பேர் மீது சாகேத் நீதிமன்றத்தில் புதிதாக 12 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 294 பேர் மீது சாகேத் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தப்லீக் ஜமாத்
தப்லீக் ஜமாத்

டெல்லி: நிஜாமுதீன் மர்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 536 பேர் மீது சாகேத் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிதாக 12 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, விசா மோசடி, மத பரப்புரை ஆகிய பிரிவுகளின் கீழ் இக்குற்றப்பத்திரிக்கையை காவல் துறையினர் தாக்கல் செய்திருந்தனர்.

ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் 82 பேர் மீது 20 குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் மே 26ஆம் தேதி தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து மே 27ஆம் தேதி (புதன்கிழமை) 294 பேர் மீது சாகேத் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது 536 பேர் மீது புதிதாக 12 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்று பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 14 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினர் 536 பேருக்கு எதிராக, 15 புதிய குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை விசாரித்த பெருநகர் மாஜிஸ்திரேட் சயீமா ஜமில் அடுத்த விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், “குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரும் விசா விதிகளையும், கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடர்பாக அரசு விதித்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறியுள்ளளனர். மேலும், குற்றவியல் நடைமுறை விதிகள் 144 பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகள் ஆகியவற்றையும் மீறியுள்ளனர்.

மேலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 188, 269, 270, 271 ஆகியவற்றையும் மீறியுள்ளதாக அந்தக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மேற்கு டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்றவர்களால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, மசூதிக்கு காவல் துறை சீல் வைத்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள மசூதிகளில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details