அரசியலமைப்பு சட்டம், 370 நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அம்பேத்கர், சர்தார் பட்டேல், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர்கள் ராம் மாதவ், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இந்நாளை சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தனர். அரசியலமைப்பு பிரிவு 370 சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த முகர்ஜி, ஒரே நாட்டில் இரு சட்ட அமைப்பு இருக்கக் கூடாது என தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிராக அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீருக்கு, கடந்த 1953ஆம் ஆண்டு, மே 11 ஆம் தேதி முகர்ஜி செல்கிறார்.
பின்னர், கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஜூன் 23ஆம் தேதி, சிறையில் சர்ச்சைக்குரிய விதத்தில் உயிரிழந்தார். அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நசுக்கும் விதமாக முகர்ஜி கொல்லப்பட்டுள்ளார் என, பாஜக பல காலமாக தெரிவித்துவருகிறது.