கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களின் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதன் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதி எனக் கருதப்படும் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (LAC) பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்டில் உள்ள சமோலி பகுதியில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் பகுதியையொட்டி 345 கி.மீ அளவிற்கான எல்லையை சீனா இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது. எனவே உத்தரகாண்ட்டில் உள்ள பரஹோதி, மணா, நிதி, மலாரி ஆகிய எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பரஹோதி எல்லைப் பகுதியில் சீன, நேபால் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவும் நேபாளமும் ஒருங்கிணைக்கக்கூடிய பராஹோதியில் அவர்கள் பிரச்னை ஏற்படுத்தலாம். அதனால் உத்தரகாண்ட் அரசு பராஹோத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.
சீனாவிடமிருந்து எல்லைகளை பாதுகாப்பதை விட கோயில்களை பராமரிப்பதில் தான் உத்தரகாண்ட் அரசு தீவிரம் காட்டிவருகிறது. எனவே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் பராஹோதிக்கு வருகை தர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2014 முதல் 2018 வரை சீனா எட்டு முறை பரஹோதி, மணா, நிதி, மலாரி ஆகிய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது.