பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த மாதம் வாய்ஸுக்கு(அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட கனடியர் டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஒளிபரப்புத்துறை நிறுவனம்) அளித்தபேட்டியில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமியர்கள் மற்றவர்களுக்கு சமமானவர்கள் அல்ல என்றும் 30 விழுக்காட்டிற்கு மேல் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமானாமல் நாட்டிற்கு ஆபத்து என்றும் பேசியுள்ளார்.
இந்தப் பேட்டியின் வீடியோ வெளியான பின், இஸ்லாமியர்கள் மீது சுப்ரமணியன் சுவாமி வெறுப்பை கக்குகிறார் என்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, யூதர்களை நாசிக்கள் பேசியது போல் இந்தியாவிலுள்ள 200 மில்லியன் இஸ்லாமியர்களைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார் என்றும் இவ்வாறு பேச ஆர்.எஸ்.எஸ் ஊக்கப்படுத்துகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப்பேட்டி ஒளிபரப்பான பின்பு ஐ.நா. மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இனப்படுகொலை தடுப்புக்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்(Adama Dieng), கடந்த திங்களன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சுப்ரமணியன் சுவாமி பேசியருப்பது மிகவும் ஆபத்தானது. வெறுப்பு பேச்சு மனிதநேயமற்றது என்றும் அவரின் பேச்சு சர்வதேச மனித உரிமைகளின் விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இனப்படுகொலைக்கான தொடக்கம் வெறுப்பு பேச்சே என்றும் தெரிவித்துள்ளார்.