கொல்கத்தா:கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே மிரட்டிவரும் கொவிட்-19 (கொரோனா) என்ற தொற்றுநோய் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோயால் இதுவரை நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் மாஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிவுகுறிகளுடன் ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக அம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாவட்ட சுகாதாரத் துறை இயக்குநர் கூறுகையில், "சர்க்கரை நோயாளியான இவர், சவுதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ளார். 3-4 நாள்களாக இன்சுலின் உட்கொள்ளாமல் இருந்துள்ளார்.
சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை இருந்ததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவரின் உடலைத் தொட குடும்பத்தினர் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்நபரின் இறுதிச் சடங்கை மேற்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடி, கையுறை உள்ளிட்டவை வழங்கப்படும். அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை" என்றார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றியதாகக் கூறப்படும் கொவிட்-19 வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடூரக் கொரோனா : ஈரானில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு