தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டெர்லைட் ஆலை: வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை - ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

sc to hear today sterlite appeal case
sc to hear today sterlite appeal case

By

Published : Aug 31, 2020, 10:45 AM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 1994ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இதுவரை சுற்றுச்சூழல் மாசு, விஷவாயு கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நான்கு முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இறுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது.

அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதேபோன்று, ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, தடை தொடரும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: 'ஸ்டெர்லைட் மூடப்பட்டால் 3 மில்லியன் டன் சரக்கு கையாளுகை பறிபோகும்'

ABOUT THE AUTHOR

...view details