கரோனா நேரத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு ஊதியத்தை குறைப்பதும், ஊதியம் வழங்காமலும் இழுத்தடிப்பதும், சில மாநிலங்களில் உள்ளது. ஆகையால் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண மருத்துவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
அப்போது, “போர்க்களத்தில், போர்புரியும் பாதுகாப்புப் படை வீரர்களை எப்படி அந்த நாடு வஞ்சிக்காதோ அதைபோல், கரோனா காலத்தில் மக்களின் உயிர்களைப் போராடி காப்பாற்றிவரும் மருத்துவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் அதிருப்தியை ஏற்படுத்தாமல் அரசு இருக்க வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், மருத்துவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்துவது குறித்து மத்திய அரசு கொண்டுவந்த புதிய கரோனா வழிமுறைகளுக்கு எதிராக, அருஷி ஜெயின் என்பவர் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
அதனையும் இந்த வழக்கோடு ஏற்று விசாரித்த நீதிபதிகள், "மத்திய அரசின் புதிய கரோனா வழிமுறைகளில், 14 நாள்கள் பணியிலிருந்த மருத்துவர்களுக்கு தொற்றின் அறிகுறி இருந்தால் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்" எனக் கூறினர்.