1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் சீக்கிய எதிர்ப்பு கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோகருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஜ்ஜன் குமாரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வான் கோகர் உச்ச நீதிமன்றத்தில் பிணை (ஜாமின்) வழங்கக் கோரி முறையிட்டிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும் நீதிபதி அனிருத்த போஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பல்வான் கோகருக்கு இடைக்கால நிவாரணமான பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். பல்வான் கோகர் மனுவில், “தனக்கு வயது முதிர்வு காரணமாக நோய்கள் இருப்பதாகவும், கோவிட்-19 பெருந்தொற்று பரவி வரும் நிலையில் தாம் சிறையில் இருந்தால் தமது உயிருக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்திருந்தார்.
இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். முன்னதாக கோகருக்கு அவரது தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஜனவரி 15 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் நான்கு வாரம் பரோல் வழங்கியது.
அதன் பின்னர் அவர் சிறைக்கு திரும்பினார். பல்வான் கோகருக்கு பிணை வழங்க மத்திய அரசின் வழக்குரைஞர் துஷார் மேக்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் காணொலி காட்சி வாயிலாக நடத்தினர்.
இதையும் படிங்க: 'சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது'