தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம்! - வேதாந்தா நிறுவனம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Dec 2, 2020, 1:33 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 1994ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறது. இதுவரை சுற்றுச்சூழல் மாசு, விஷவாயு கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நான்கு முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இறுதியாக, 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து, ஆய்வுமேற்கொண்டு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கையின்படி ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேபோன்று, ஆலையைத் திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனு தாக்கல்செய்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details