உலக நாடுகளை உலுக்கும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். பல பிரபலங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை அரசுக்கு வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில், வெளிநாட்டில் வசித்து வரும் மக்கள், இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் முதலில் அணுகுவது நம்பகத்தன்மையும், லாபம் நோக்கமற்ற அமைப்புமான ஆன்லைன் தளம் "கிவ் இந்தியா" தான். தற்போது, அவர்கள் வெளிநாட்டு மக்கள் வழங்கும் பணத்தின் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கிவ் இந்தியா ஆன்லைன் தளம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவல் மிகவும் பாதிக்கப்பட்ட தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக ரூ. 5 கோடி நிதி வழங்கிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக, உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கூகுள் நிறுவனம் சார்பில் 800 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் போலவே, டாடா டிரஸ்ட் மற்றும் டாடா குழுமம் இணைந்து ரூ. 1,500 கோடியும், விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட், அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து ரூ. 1,125 கோடியும் அதிகபட்சமாக வழங்கியுள்ளனர். மேலும், பேடிஎம் நிறுவனம் சார்பாக கரோனாவை எதிர்த்து போராடும் ராணுவம், சிஆர்பிஎஃப், சுகாதார ஊழியர்களுக்கு நான்கு லட்சம் முகக்கவசங்களையும், 10 லட்சம் சுகாதார பொருள்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகளவில் 18. 5 லட்சத்தை கடந்த கோவிட் 19 தொற்று