இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து பயன்பாட்டில் இல்லாத நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் வடக்கு வங்காளத்திலிருந்து வங்கதேசத்தில் உள்ள சிலாஹாத்தி செல்வதற்கான ரயில் இணைப்பின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ரயில் இணைப்பானது, 1965ஆம் ஆண்டு முடக்கப்பட்டது.
55 ஆண்டுகால கனவு நிறைவேறுமா? இந்தியா-வங்கதேச உறவை மேம்படுத்த முயற்சி!
கொல்கத்தா : 55 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இந்திய - வங்கதேசம் இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டெடுக்கும் வகையில், ஹல்திபரி-சிலாஹதி ரயில் இணைப்பின் சோதனை ஓட்டம் இன்று (அக்.09) வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் பெற்று வங்க தேசமாக உருவெடுத்த பின்னரும், இந்த ரயில் பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், இரு நாட்டு மக்களும் இந்த முயற்சியினை வரவேற்றுள்ளனர். இந்த சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த வடகிழக்கு ரயில்வேயின் தலைமைப் பொறியாளர் ஜே.பி.சிங் இது குறித்து கூறுகையில், "இந்த முயற்சி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு மக்களுக்கும் இது தேவைப்படுகிறது. கனவு நனவாக உள்ளது.
ரயில் இணைப்பை மீட்டெடுப்பதற்கான பணி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் நடுவில் சில காலம் முடங்கியது. வங்கதேசமும் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால், இயக்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும்" என்றார்.