ஊரடங்கால் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீள உதவும் வகையில், அவற்றுக்கு பிணையில்லா மூன்று லட்சம் கோடி கடன் வழங்குவது, உள்ளிட்ட ஆறு முக்கியத் திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
இது குறித்து SME Chambers of India தலைவர் சந்திரகாந்த் சலுன்கே கூறுகையில், "தற்போதைய சூழலில் அரசு அறிவித்துள்ள இந்த உதவித் திட்டங்கள் போதுமானது. ஆனால், இந்தத் திட்டங்களை நிதி நிறுவனங்களும், அரசுத் துறைகளும் எவ்வாறு செயல்படுத்த உள்ளன என்பதிலேயே இதன் வெற்றி இருக்கிறது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை முறையே ரூ.5 கோடி, 75 கோடி, 250 கோடி என்ற வருமானங்களின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தோம். அந்தவகையில் எங்களுக்கு ஏமாற்றம்தான்.
இத்துறை நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிட வேண்டும் என்றால், சர்வதேச தரநிலைக்குள்பட்டு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.
கடன் என்று வரும்போது எல்லா வங்கிகளும் இத்துறை நிறுவனங்களைக் கடன் செலுத்தத் தவறுபவர்களாகவே பார்க்கிறார்கள். அந்த எண்ணம் தவறானது" எனத் தெரிவித்தார்.