புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆனந்த், சுவாமிநாதன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், 'புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-2020ஆம் கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட 225 விழுக்காடு கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரியும், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடங்களை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வழங்க வேண்டியும், மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக இயக்கப்பட்ட இலவசப் பேருந்து சேவையை ரத்து செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தி, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.
மாணவர் கூட்டமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம், கல்விக் கட்டணத்தை உயர்த்தி, நியாயப்படுத்தி உள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வரும் 26ஆம் தேதி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி வருகை தர உள்ளார்.
அதனால், புதுவை மாநில மாணவர்கள் கல்வி உரிமை பாதுகாத்திடக்கோரி, அனைத்து மாணவர்கள் அமைப்புகள் கூட்டியக்கம் சார்பாக, ஒருநாள் முன்பாக 25ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் கவனத்தை ஈர்க்கும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகில் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது