தென்னிந்தியாவில் அதிக அளவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடிபெயர்ந்திருக்கும் சில நகரங்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரும் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அம்மாநிலத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இரண்டு மாத கால ஊரடங்கில் மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் உதவி செய்தாலும் அவர்களுக்கான தன்னிறைவு என்பது கடைசிவரை ஏற்படவில்லை. தற்போது, ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, சொந்த ஊர் செல்வதற்காக, பெங்களூருவில் மட்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தாண்டியது. சிறப்பு ரயில்கள் மூலம் பெங்களூருவிலிருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவதை நம்பியும், ரயில் நிலையத்திற்கு நேரில் சென்றால் ஊர் சென்று விடலாம் என்று சொன்னவர்களின் வாக்கை நம்பியும் பெங்களூரு அரண்மனை அருகில் வந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
சிக்கியுள்ள குடிபெயர்ந்தோருக்கு உதவிகளை செய்துவரும் ரோஸ்மேரி விஸ்வநாத கூறுகையில், "அசாமைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள அரண்மனை மைதானத்தில் கூடியிருக்கின்றனர். தங்கள் மாநிலத்திற்கு எந்தவொரு ரயிலும் கடந்த ஆறு நாள்களாக இல்லாத காரணத்தால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.