உலகில் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட டெல்லியின் மக்கள் தொகை 140 நாடுகளை விட அதிகம். 70 சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய டெல்லி சட்டபேரவைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. இதன்மூலம் நமது நாட்டின் தலைநகர் டெல்லியின் அரசியல் சூழ்நிலை சுவாரஸ்சியமானதாக மாறியுள்ளது.
சுமார் ஒரு கோடியே நாற்பத்தியேழு லட்சம் வாக்காளர்களுக்காக. தேர்தல் ஆணையம் 13,750 வாக்குச் சாவடிகளையும் 90 ஆயிரம் தேர்தல் பணியாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. முதன்முறையாக 80 வயதுக்கு மேலுள்ள மிக மூத்த குடிமகன்களும் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் நாள் வரை வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பது, வாக்குச் சீட்டில் QR code உள்ளிட்டவையும் இந்தத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தலைநகருக்கு ஆறு முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. முதல் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் பாஜக வென்று ஆட்சியை பிடித்தது. பின் ஷீலா தீக்ஷித் தலைமையில், காங்கிரஸ் மூன்று முறை ஆட்சியை பிடித்தது.
நவம்பர் 2012ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் வருகைக்கு பின் டெல்லியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்குவந்தது. 2013, 2015 ஆகிய இரு தேர்தல்களில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி டெல்லிவாசிகளுக்கு விருப்பமான கட்சியாக உருவெடுத்து. குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 67 இடங்களை கைப்பற்றியது.
இருந்தபோதும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் 26 விழுக்காடும், மக்களவைத் தேர்தலில் 18 விழுக்காடும் மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் பெற முடிந்தது. இது எதிர்கட்சிகளின் மத்தியில் புதியதொரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2014ஆம் மோடி அலையால் டெல்லியிலுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. ஆனால், அதற்கு அடுத்தாண்டே நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் 70 தொகுதியில், வெறும் மூன்றில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியில் எதிர்பாதாராத வெற்றியை பாஜக பெற்றது. இருந்தபோதும், சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லிவாசிகளின் மனநிலை எப்படி மாறும் என்பது குறித்த கவலை பாஜகவிடம் உள்ளது. பரபரப்பான இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது போல இருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும்போது, "நாம் அனைவரும் முதல் தர குடிமகன்கள்; ஆனால் நாம் மூன்றாம் தர அரசால் பாதிக்கப்படுகிறோம்" என்றார். மேலும், அரசியலில் புரையோடியுள்ள ஊழலை ஒழிக்கும் வகையில், துடைப்பத்தை தனது சின்னமாக தேர்ந்தெடுத்தார், தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றியையும் பெற்றார்.
அந்தத் தேர்தலில், 29.5 விழுக்காடு வாக்குகளுடன் ஆம் ஆத்மி 28 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரவு தர, ஆட்சியையும் பிடித்தது. ஏழு வாரத்தில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜான் லோக்பால் மதோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களின் பெருவாரியான ஆதரவால், ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.