தெலங்கானாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராடிவருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தொழிலாளர்களின் குடும்பத்தை கவனத்தில்கொண்டு, அரசு மீண்டுமொரு வாய்ப்பு வழங்குகிறது. மூன்று நாள்களுக்குள் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் விதித்த கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து மஸ்தூர் சங்க செயல் தலைவர் எம். தாமஸ் ரெட்டி கூறும்போது, “40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வரவில்லை என்றால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். வருகிற 9ஆம் தேதி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்துவார்கள்” என்றார்.
இதற்கிடையில் கடந்த திங்கள்கிழமை முதலமைச்சர் அலுவலகம் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை வழங்கியது. அதில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்