ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தூத்துக்குடி போராட்டம் நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்றது. ஆனால் அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 உயிர்கள் அநியாயமாக பலியாகின. இதுதொடர்பான விசாரணையில், சாட்சியங்களைப் பதிவு செய்து 2400 பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகள் அடங்கிய அறிக்கை வெளியானது" என்றார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வைகோ வாதம் - உச்சநீதிமன்றத்தில் வாதம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைடுக்கு எதிராக போராடிய 13 பேரின் உயிர் தியாகம் நீதி கேட்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வைகோ, அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. பத்து லட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்" என்று வைகோ உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.