தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டெர்லிங் பயோடெக்கின் ரூ. 14,500 கோடி பண மோசடி வழக்கு: காங்கிரஸ் பொருளாளரிடம் விசாரணை!

டெல்லி : ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டெர்லிங் பயோடெக்கின்  14,500 கோடி பண மோசடி வழக்கு: காங்கிரஸ் பொருளாளரிடம் விசாரணை!
ஸ்டெர்லிங் பயோடெக்கின் 14,500 கோடி பண மோசடி வழக்கு: காங்கிரஸ் பொருளாளரிடம் விசாரணை!

By

Published : Jun 30, 2020, 4:30 PM IST

குஜராத் மாநிலத்தில் இயங்கி வந்த சந்தேசரா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மீது 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலம் வரை 14,500 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் எஸ்.பி.ஐ, யூகோ, பேங்க் ஆஃப் இந்தியா உள்பட சில முக்கிய வங்கிகளில் கடனைப் பெற்றுவிட்டு, நைஜிரியா தப்பிச்சென்றதாக அறிய முடிகிறது. இதனையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே மிக மோசமான வங்கி மோசடியை சந்தேசரா குழுமம் செய்துள்ளதாக அமலாக்க இயக்குரகம் வெளிப்படையாக தெரிவித்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விசாரணையை மேற்கொண்டு வந்த அமலாக்கத்துறையினர், இந்த பெரும் வங்கிகள் மோசடியில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் மகன் பைசல் மற்றும் மருமகன் இர்பான் சித்திக் ஆகியோருக்கும் பெரும் தொகை லஞ்சமாக கைமாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இருவரின் மூலம் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இதற்கெல்லாம் காரணமானவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் அகமது படேலிடம் அமலாக்கப்பிரிவினர் கடந்த 27ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கில் சிக்கவைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக படேலின் மகன் பைசல் மற்றும் மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் போது அவர்கள் நிதின் சந்தேசராவை தெரியும் என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நலக் குறைவையும், கரோனா பெருந்தொற்றுநோய் பரவலையும் காரணம் காட்டி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து தவிர்த்து வந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலிடம், அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமலாக்கத் துறையினர் இன்று மூன்றாவது நாளாக தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர். நிதி மோசடி விசாரணை அலுவலர்கள் கூறுகையில், "படேலிடம் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. எனவே அவரிடமிருந்து உண்மைகளை வெளிக்கொண்டுவர மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இன்று நடைபெறும் இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன குடும்பத்தினருக்கு நைஜீரியா, லண்டன் ஆகிய இடங்களில் உள்ள 9,778 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details