தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நட்சத்திரங்களைச் சென்றடைவோம்' - நம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் - Stephen Hawking

அடுத்த 1,000 ஆண்டுகளை மனித இனம் கடந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த ஒரு கிரகத்தில் பல விபத்துகள் நிகழவுள்ளதால் மனித வாழ்க்கை வீழ்ச்சி அடையவுள்ளது. நாம் நட்சத்திரங்களுக்குச் சென்றடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்

By

Published : Jan 8, 2021, 10:34 PM IST

Updated : Jan 8, 2021, 10:49 PM IST

நாம் பிரபஞ்சத்தைப் பார்க்கும்விதத்தையே தனது கோட்பாட்டால் மாற்றிக்காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங். நம் காலத்தில் உலகின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான அவர், தனது புத்தகங்களால் அறிவியலை அனைவருக்கும் எளிமையாக்கியவர். A Brief History f Time, The Theory of Everything உள்ளிட்ட அவரின் புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் நெருப்பை உருவாக்கும் பொருள் தீர்ந்துபோனதும், அங்கிருந்து வெப்பமும், ஒளியும் உருவாவது நின்றுவிடும். பின்னர், அந்த நட்சத்திரமானது தன்னுடைய ஈர்ப்பு விசையின் காரணமாக தனக்குள்ளேயே சுருங்கத் தொடங்கும். அந்த ஆற்றல் பெரிதாக இருப்பதால், அந்த நட்சத்திரம் தன்னைத் தானே முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டு, மிகச்சிறிய அளவிற்குள் சுருங்கும். இந்த நிலையே கருந்துளை (Black hole) எனப்படும்.

இளம்வயது ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மிகச் சிறந்த படைப்பு அவரின் Black hole (கருந்துளைகள்) குறித்த கருத்தாக்கமே ஆகும்.

இம்மாதிரியான சுருங்கிய நட்சத்திரங்களின் குழுக்களே கருந்துளைகள். நம்முடைய பூமியின் அளவுகொண்ட நட்சத்திரம் கருந்துளையாகிவிட்டால் இரண்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக அது சுருங்கிப் போய்விடும். சூரியனின் அளவுடைய நட்சத்திரம் கருந்துளையாகும்போது 3 கிலோமீட்டர் ஆரம் கொண்ட கருந்துளையாக மாறிவிடும்.

ஒளி உள்பட, இதன் அருகே செல்லும் எதுவுமே இதன் ஈர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. இத்தகைய கருந்துளைகள் வெவ்வேறு அளவுகளில் ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலும் நமது கேலக்ஸியில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

ஹாக்கிங் தம்பதி

ஈர்ப்பு விசை மிகக் கடுமையாக இருப்பதால் கருந்துளைகளுக்கு உள்ளேயிருந்து எதுவுமே வெளியேற முடியாது என்றுதான் கருதப்பட்டுவந்தது. ஆனால் தனது ஆராய்ச்சியின்போது ஹாக்கிங் போட்டுப்பார்த்த ஏராளமான கணக்கீடுகள் ஆச்சரியமூட்டும் முடிவினை வெளிப்படுத்தின.

Hawking radiation

கருந்துளைகள் தங்களிடம் இருக்கும் சக்தியை மிக மிக நீண்ட நெடிய காலப்போக்கில் மிகவும் சிறிது சிறிதாக இழக்கின்றன. இந்த ஆற்றல் துகள்களாகவும், வெப்பக் கதிர்களாகவும் மிக நுண்ணிய அளவுகளில் வெளிப்படுகிறது என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். இதற்கு 'Hawking Radiation' என்று பெயர் வைக்கப்பட்டது.

நம்பிக்கை நாயகன்

இப்படி, தனது அறிவியல் கண்டுபிடிப்பால் உலகத்தையே பிரமிக்கவைத்த ஹாக்கிங், மோட்டார் நியூரான் நோயான, நரம்புத்தசை நோயால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய உடலைக்கூட அசைக்க முடியாத அவர், தனது படைப்புகளால், உலகேயே திரும்பிப் பார்க்கவைத்தார். இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரைதான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

அதன்பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டியும் முடித்தார். அவருக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கணினி உதவியுடன், தனது கருத்துகளை வெளியிட்டார்.

ஸ்டீபன் ஹாக்கிங்

அதனைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியாகப் பணியாற்றினார். The Theory of Everything என்று அவர் எழுதிய புத்தகத்தின் பெயரிலேயே வெளியான ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றுப்படம் மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படமாக மதிக்கப்படுகிறது.

"நட்சத்திரங்களுக்குச் சென்றடைவோம்"

'அடுத்த 1,000 ஆண்டுகளை மனித இனம் கடந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பூமியில் பல விபத்துகள் நிகழவுள்ளதால் மனித வாழ்க்கை வீழ்ச்சி அடையவுள்ளது. எனவே, நாம் நட்சத்திரங்களுக்குச் சென்றடைவோம்' என நம்பிக்கை வார்த்தைகளுக்குச் சொந்தக்காரரான அவர், 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Amyotrophic lateral sclerosis என்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையே ஆயுள் இருக்கும். ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த நோயுடன் பயணித்த அவர், அறிவியல் உலகில் அசாத்திய படைப்புகளைப் படைத்தார்.

நட்சத்திரங்களின் மீது தீராக் காதல் கொண்ட ஹாக்கிங்கின் 78ஆவது பிறந்த நாளான இன்றும் அவர் நம்பிக்கை நட்சத்திரமாகவே திகழ்கிறார். எதை இழந்தாய் என்பதல்ல... என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் என்ற அவருடைய சொல் நம் அனைவருக்குமானது.

நம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங்
Last Updated : Jan 8, 2021, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details