ஆந்திரப் பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடவுள் ராமர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு இந்து கடவுள் சிலையும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமகேந்திரவரம் நகரில் விநாயகர் கோயிலில், சுப்ரமண்யேஸ்வர சிலையும் கடந்த ஒன்றாம் தேதி சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள், சிலைகள் தாக்கப்படுகின்றன” என்றார்.
இந்நிலையில் நேற்று (ஜன. 5) ஸ்பந்தனா மாநாட்டில் காணொலி வாயிலாக அலுவலர்களுடன் உரையாற்றிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு புதிய வகையான அரசியல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கங்களுடன் நள்ளிரவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் கோயில்களும், சிலைகளும் சேதப்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் ஆந்திராவின் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனால் கோயில்கள் தாக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருக்கவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க...மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கங்குலி!